குடியரசு தினம்: சுபன்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா; மொத்தம் 70 பேருக்கு கேலன்ட்ரி விருதுகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வரலாற்றுச் சாதனை படைத்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கு, அமைதிக்காலத்தின் மிக உயரிய வீர விருதான அசோக சக்ரா வழங்கப்படுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் இன்று மொத்தம் 70 ஆயுதப்படை வீரர்களுக்கு கேலன்ட்ரி விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆக்சியம்-4 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற சுபன்ஷு சுக்லாவும் இடம் பெற்றுள்ளார். இந்த முறை அசோக சக்ரா விருது வென்றவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
போர் விமானி
அனுபவம் வாய்ந்த போர் விமானி
சுபன்ஷு சுக்லா, 1984 இல் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்ற பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று அங்குக் கால் பதித்த முதல் இந்திய இஸ்ரோ வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 41 வயதான சுபன்ஷு சுக்லா, இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த போர் விமானிகளில் ஒருவர். சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, ஜாகுவார் போன்ற நவீன போர் விமானங்களை சுமார் 2,000 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கிய அனுபவம் கொண்டவர். இவரது இந்த அனுபவம் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுகள்
பிற கேலன்ட்ரி விருதுகள் அறிவிப்பு
குடியரசுத் தலைவர் இன்று மொத்தம் 70 ஆயுதப்படை வீரர்களுக்கு கேலன்ட்ரி விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரங்கள்: அசோக சக்ரா: 1 (குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா) கீர்த்தி சக்ரா: 3 (மேஜர் அர்ஷ்தீப் சிங், நாயப் சுபேதார் டோலேஷ்வர் சுப்பா மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்) சௌரிய சக்ரா: 13 சேனா பதக்கங்கள்: 44