அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி
மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பாம்ரகாட் தாலுகாவில் உள்ள அரேவாடா கிராமத்தைச் சேர்ந்த மண்டோஷி கஜேந்திர சவுத்ரி (24) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். அங்கு இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தது நிலைமையை மோசமாக்கியது. இதற்கிடையே, உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் இடுப்பளவு தண்ணீரில் ஒருவழியாக அவரை சிரமப்பட்டு பாம்ரகாட் கிராமப்புற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாய்க்கு அரிதான பி-நெகட்டிவ் இரத்தம் தேவை
அங்கு அவர் திங்கட்கிழமை குழந்தையைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார். குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுத்தாலும், பிரசவத்தின் போது அந்த பெண் அதிக இரத்த இழப்பை சந்தித்தார். அதற்காக அவருக்கு அவசரமாக குறைந்தது ஒரு யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. அவருக்கு அரிதான பி-நெகட்டிவ் ரத்த வகை இருப்பது தெரிய வந்ததால் நிலைமை மேலும் சிக்கலானது. மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த இரத்த வகை உள்ளது குறிப்பிடத்தக்கது. பாம்ரகாட்டில் உள்ள மருத்துவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கட்சிரோலி மாவட்ட மருத்துவமனையில் அரிய வகை பி-நெகட்டிவ் ஒரே ஒரு யூனிட் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
ஹெலிகாப்டர் மூலம் உதவிய காவல்துறை
இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை வழியாக ரத்தம் கொண்டுவரவே முடியாது எனும் சூழலில் அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்நிலையில், புதன்கிழமை காலை மழை நின்று வானிலை திடீரென தெளிவடைந்ததை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய கட்சிரோலி காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் ஒரு யூனிட் பி-நெகட்டிவ் ரத்தத்தை நோயாளிக்கு பாதுகாப்பாக கிடைக்கும்படி செய்தது. இதையடுத்து தற்போது தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை அவரே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் உதவிய செயல் வெளியே தெரிந்து மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.