ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களது வருகையினையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, டெல்லியில் இம்மாநாடு நடக்கும் மண்டபம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு, மின் விளக்குகளால் இரவில் ஜொலிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டின் இன்றைய முதல் நாள் கூட்டம் இன்று(செப்.,9) பிரதமர் உரையுடன் துவங்கியது.
உண்மை நிலையை மறைக்க வேண்டிய அவசியமில்லை - ராகுல் காந்தி
இதனிடையே, ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள குடிசை பகுதிகள் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த எம்.பி. ராகுல் காந்தி. இது குறித்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இந்தியாவின் உண்மை நிலையினை மத்திய அரசு விருந்தாளிகளிடம் இருந்து மறைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர், ஏழை மக்களையும், விலங்குகளையும் மத்திய அரசு மறைக்க முயற்சி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்