சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம்
சென்னை ஐஐடி மாணவர்களுக்கான குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரியான ஜி.திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இவர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடு இணைந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை தீர்க்கும் பணியினை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஐ.ஐ.டி.மாணவர்களின் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது, அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்தல், நெறிசார்ந்த நடைமுறைகள் அனைத்தையும் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஐஐடி.,இயக்குனர் வீ.காமகோடி இதுகுறித்து கூறுகையில்,'ஐஐடி மாணவர்களின் நலன் கருதி அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது' என்றும், 'இந்த முறைமன்ற நடுவர் நியமனம் ஐஐடி தங்கள் மாணவர்களின் நலன் மீதான அக்கறையினை மேலும் அதிகரிக்கவும், ஐஐடி மீதுள்ள நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
மனநல ஆலோசகர்கள் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஐஐடி மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது. கொரோனா காலத்தில் சரியாக படிக்க முடியாமல், வேலைக்கான நேர்காணலில் தேர்வாக முடியாத காரணத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தெரியவந்தது. இந்நிலையில் அவர்களது மன அழுத்தத்தினை போக்க மனநல ஆலோசகர்கள் கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனிடையே, தொடரும் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களது மனநிலையினை அறிக்கையாக அளித்தது. இதனிடையே தற்போது சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்கள் குறைதீர்ப்பாளராக திலகவதி ஐபிஎஸ்'ஸை நியமனம் செய்துள்ளது.