வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் RAC இல்லை: புதிய டிக்கெட் முன்பதிவு விதிகள் மற்றும் கட்டண விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். கௌஹாத்தி - ஹவுரா இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், பயண முன்பதிவு முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இந்த ரயிலில் ஆர்.ஏ.சி (RAC) எனப்படும் உறுதிப்படுத்தப்படாத டிக்கெட் முறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இருக்கையை பகிர்ந்து பயணிக்கும் வசதி இதில் கிடையாது; உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பகுதி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இதில் அனுமதி இல்லை. மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கட்டண விவரங்கள்
கட்டணத்தைப் பொறுத்தவரை, ராஜ்தானி எக்ஸ்பிரஸை விடச் சற்று கூடுதலாக இருக்கும். 3AC-க்கு கிலோமீட்டருக்கு ₹2.4, 2AC-க்கு ₹3.1 மற்றும் 1AC-க்கு ₹3.8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 130 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயில், வழக்கமான எக்ஸ்பிரஸ்களை விடப் பயண நேரத்தை 3 மணி நேரம் வரை குறைக்கும். இதில் தானியங்கி கதவுகள், மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள், 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு மற்றும் சத்தமில்லாத பயண அனுபவம் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் மற்றும் முதியோருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் வழக்கம் போலத் தொடரும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.