ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு
அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே உள்ளிட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என எழுதக்கூடாது, தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் Curd என எழுதிவிட்டு அதன் கீழ் தஹி என எழுதுமாறும், வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தன. இதற்கு பல அரசியல் கட்சிகள், இந்தியினை இவ்வாறு திணிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா போன்ற மாநிலங்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தது.
கடும் எதிர்ப்பு காரணமாக வாபஸ்
இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கடும் எதிர்ப்பினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், எங்கள் தாய் மொழியை தள்ளி வைக்க சொல்லும் உணவு பாதுகாப்பு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதை கேளுங்கள். இந்தியை திணிக்க வேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்னும் உத்தரவினை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் பெயர் எழுத தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.