LOADING...
பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!
மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் அதிரடி மாற்றம்

பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2025
09:22 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் 2026, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதுவரை பாட்டில் குடிநீர் விற்பனை செய்ய BIS மற்றும் FSSAI ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் அனுமதி பெறுவது கட்டாயமாக இருந்தது. இதனால் ஏற்படும் நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்க, இனி FSSAI உரிமம் மட்டுமே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. BIS முத்திரை பெறுவதற்கான கட்டாயம் நீக்கப்படுவது உற்பத்தியாளர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

தரக்கட்டுப்பாட்டில் சமரசம் இல்லை என்கிறது அறிவிப்பு

உரிமம் பெறுவது எளிதாக்கப்பட்டாலும், தர கட்டுப்பாட்டில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. குடிநீரை 'அதிக ஆபத்துள்ள உணவுப் பொருள்' (High-Risk Category) என்ற பிரிவில் FSSAI சேர்த்துள்ளது. இதன் மூலம், இனி குடிநீர் ஆலைகளில் கூடுதல் கண்காணிப்பும், கடுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.

நிபந்தனைகள்

உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள்

குடிநீரில் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுயிரிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ஆய்வகச் சோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கதிர்வீச்சுத் துகள்கள் (Radioactive residues) கண்டறியப்பட்டால், அந்த நீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவது உடனடியாகத் தடை செய்யப்படும். மேலும், விற்பனைக்குச் சென்ற பாட்டில்களைத் திரும்பப் பெற உத்தரவிடப்படும். நிலத்தடி நீர் அல்லது பயன்படுத்தப்படும் மூல நீரை (Raw water) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும். குடிநீர் ஆலைகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு (Auditing) உட்படுத்தப்படுவதுடன், திடீர் சோதனைகளும் நடத்தப்படும்.

Advertisement