
ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி, கூடுதல் கட்டணம் இல்லாமல் டிக்கெட் தேதியை ஆன்லைனில் மாற்றலாம்
செய்தி முன்னோட்டம்
ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, பயணத் திட்டங்களில் மாற்றம் செய்யும் புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயணிகள், தங்களின் கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டின் பயணத் தேதியை ஆன்லைன் மூலமாக மாற்ற, எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய கொள்கை ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் NDTV-க்கு தெரிவித்தார். இதன் மூலம் பயணிகள் ரத்து கட்டணத்தை தவிர்த்து, தங்கள் பயணத் திட்டங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். தற்போது நடைமுறையில் உள்ள முறையில், பயணத் தேதி மாற்ற, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து, புதிய டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
விவரங்கள்
IRCTCயின் புதிய திட்ட விவரங்கள்
இதனால் அதிக கட்டணமும், ரத்து செலவுகளும் ஏற்படுகின்றன. புதிய திட்டம் இச்சிக்கலை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில், டிக்கெட் மாற்றுவதற்கான வசதியால் எல்லா பயணிகளுக்கும் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய டிக்கெட் விலை அதிகமாக இருந்தால், பயணிகள் விலை வேறுபாட்டை செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாற்றம், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பெரும் நன்மையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் தவிர, அக்டோபர் 1 முதல், ஆன்லைன் முன்பதிவுகளுக்கான புதிய விதியாக, அனைத்து பயணிகளும் ஆதார் உறுதிப்படுத்தல் கொண்ட கணக்குகளை பயன்படுத்தி மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.