LOADING...
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2026
05:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் 'தொகுதி மறுவரையறை' மற்றும் 'மகளிர் இடஒதுக்கீடு' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கூர்ந்து கவனித்து வருகிறது. ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறும் மூன்று நாள் கூட்டத்தொடரில், அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள்(திருத்தம்) மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமான கேள்விகளும், அதற்கான விரிவான விளக்கங்களும் இதோ:

மகளிர் இடஒதுக்கீடு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்குவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டமியற்றும் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இது வழிவகுக்கும். இருப்பினும், இந்த இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வராது. தொகுதி மறுவரையறை (Delimitation) பணிகள் முடிந்த பின்னரே, 2029 பொதுத்தேர்தல் முதல் இது நடைமுறைக்கு வரும்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை (Delimitation) ஏன் செய்யப்படுகிறது?

மக்கள் தொகை மாற்றத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியும் சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவே இந்த எல்லை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக 2002-ல் (2001 கணக்கெடுப்பு படி) இது நடைபெற்றது. தற்போது, புதிய மசோதாவின்படி லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்தப்பட உள்ளது. வழக்கமாக புதிய கணக்கெடுப்பு முடிந்த பின்னரே இது நடைபெறும். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை விரைவுபடுத்த, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளையே அடிப்படையாகக் கொண்டு உடனடியாகப் பணிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது காலதாமதத்தைத் தவிர்க்க உதவும் என்று அரசு வாதிடுகிறது.

Advertisement

அச்சம்

தென்மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா? மத்திய அரசின் விளக்கம் என்ன?

மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்கள், அதிக மக்கள் தொகை கொண்ட வடமாநிலங்களை விடக் குறைவான இடங்களைப் பெற்று தங்களது அரசியல் வலிமையை இழக்க நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய அரசு இந்த அச்சத்தை போக்க முயன்று வருகிறது. "எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது; தற்போதைய விகிதாசாரப்படி (Proportionality) அனைத்து மாநிலங்களின் இடங்களும் சீராக உயர்த்தப்படும். தெற்கு மாநிலங்கள் கவலைப்படத் தேவையில்லை," என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த இடங்கள் 50% அதிகரித்தால், எல்லா மாநிலங்களின் இடங்களும் அதே விகிதத்தில் அதிகரிக்கப்படும்.

Advertisement

செயல்முறை

இந்த மசோதாக்கள் எப்படி நிறைவேற்றப்படும்?

இவை அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் என்பதால், சாதாரண சட்டங்களை விட இதற்கு அதிக ஆதரவு தேவை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். இது மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிப்பதால், இந்தியாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெற வேண்டியிருக்கும். இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement