தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்
ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டு வந்த நிலையில், இந்தக் கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறுவதாக நேற்று (ஜூலை 10) அறிவித்தது ஃபாக்ஸ்கான். அதனைத் தொடர்ந்து தற்போது, இந்தியாவில் தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்த, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மானியத்தை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, செமிகண்டக்டர்களைத் தயாரிப்பதற்காக ஆகும் மூலதனச் செலவுகளில் 50%தை மானியமாக வழங்கவிருக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய தொழிற்சாலையை அமைக்க விரைவில் விண்ணப்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்.
இந்தியாவின் முக்கிய நோக்கம்:
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த செமிகண்டக்டர் தயாரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதை மிக முக்கியமான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. இனி வரும் காலங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், அதற்கான செமிகண்டக்டர் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என நினைக்கிறது மத்திய அரசு. வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் இந்த புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது ஃபாக்ஸ்கான். வேதாந்தா நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறியதிலும் தங்களுக்குப் பின்னடைவு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கும் அந்நிறுவனம், இந்திய நிறுவனங்களுடனும் கூட்டணி அமைத்து செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.