கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்?
செய்தி முன்னோட்டம்
தைவானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூர்-ல் 300 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒப்பந்த முறையில் மின்சாதனப் பொருட்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான், ஆப்பிள் சாதனங்களைத் தயாரிக்கும் முதன்மையான நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.
ஃபாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் ஆகிய இருநிறுவனங்களுமே சீனாவிலேயே அதிக அளவிலான மின்சாதனங்களை உற்பத்தி செய்து வந்தன.
சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் காரணமாக இரு நிறுவனங்களுமே சீனாவில் இருந்து தங்களுடைய முதலீடுகளையும், உற்பத்திக் கட்டமைப்பையும் வேறு நாடுகளுக்கு மாற்ற முயற்சி செய்து வருகின்றன.
அதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபாக்ஸ்கான், தற்போது பெங்களூருவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பெங்களூரு
என்ன திட்டம்:
பெங்களூரு தேவனஹல்லி பகுதியில் விமான நிலையத்திற்கு அருகில் 1.2 மில்லியன் சதுரமீட்டர்கள் நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாக லண்டன் பங்குச்சந்தை தாக்கலின் போது குறிப்பிட்டிருக்கிறது ஃபாக்ஸ்கான்.
இதற்காக இந்தியாவில் இருக்கும் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஹான் ஹை டெக்னாலஜி இந்தியா மெகா டெவலப்மெண்ட் நிறுவனம் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கர்நாடகாவில் விரைவில் புதிய தொழிற்சாலையில் ஐபோன் தயாரிப்பை தொடங்கவிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த மார்ச் மாதமே தெரிவித்திருந்தார்.
புதிய தொழிற்சாலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐபோன் 14 மாடலை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யவிருப்பதாக அதன் வெளியீட்டிற்கு சில வாரங்களுக்கு பின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.