உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் உருமாறிய bfப்7 கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், தேசிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் 25 சதவிகிதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பரிசோதனையை அதிகரிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடக மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கு பிஎப்7 வகை கொரோனா தொற்று உறுதி
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு பிஎப்7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேரும் கொல்கத்தாவிற்கு அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து பிஎப்7 தொற்று உறுதி செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் இந்த பிஎப்7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி லட்சக்கணக்கானோரை பாதிப்பதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.