Loading...
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு; தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு; தலைவர்கள் இரங்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
01:23 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் (79) உடல்நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் செப்டம்பர் 17 வியாழக்கிழமை காலை காலமானார். சிவகங்கை அருகே உள்ள ஏரியூரை சேர்ந்த இவர், சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

அரசியல்

அரசியல் வாழ்க்கை மற்றும் வகித்த பொறுப்புகள்

சட்டம் பயின்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை தொகுதியில் 1999-2004 வரை மக்களவை எம்பியாகவும், 2004-2016 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவர், காங்கிரஸ் கொறடா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அவர் திறம்பட வகித்துள்ளார்.

இரங்கல்

மாணிக்கம் தாகூர் எம்.பி இரங்கல்

அவரது மறைவு குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளம் வயதிலேயே இந்திரா காந்தி தலைமையில் இணைந்து செயலாற்றிய சுதர்சன நாச்சியப்பனின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அவர்" எனக் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செப்டம்பர் 17 பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT