மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார்
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இவரது ராஜினாமா, எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா பிளாக் கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது. மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர்களான பாபா சித்திக் மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு அசோக் சவானின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலுக்கு அனுப்பப்பட்ட ஒரு வரி ராஜினாமா கடிதத்தில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து எனது ராஜினாமாவை 12/02/2024 நண்பகல் முதல் சமர்ப்பிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் அசோக் சவான்.
தொடரும் கட்சித்தாவல்கள்
ராஜினாமாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சவான், "எம்எல்ஏ பதவியையும், காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரிரு நாட்களில் முடிவு செய்வேன். என் வாழ்க்கை முழுவதும் காங்கிரசுக்காக உழைத்துள்ளேன். ஆனால் இப்போது நான் விருப்பங்களைத் தேடுகிறேன்." என கூறினார். ஊடக செய்திகள்படி, பாஜக அசோக் சவானுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அசோக் சவானை தொடர்ந்து மேலும் 10 முதல் 12 எம்எல்ஏக்கள் உரிய நேரத்தில் அணி மாறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் 2008 முதல் நவம்பர் 2010 வரை மகாராஷ்டிர முதலமைச்சராகப் பணியாற்றிய சவான், மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.