முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
செய்தி முன்னோட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, 62 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு
வழக்கு விவரங்கள்
சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த ஜெகதீஷ் (எ) குன்னா, ராகேஷ் (எ) குட்டு, மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த அசோக் (எ) லட்சுமணன் ஆகிய மூன்று பேரை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) குற்றவாளிகள் என அறிவித்தது. இன்று (நவம்பர் 24) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன், மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் 20 ஆண்டுகளாக நடந்த இந்தச் சம்பவத்திற்கான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே கார்த்தி நடிப்பில், 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.