ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் இருந்து ஆண் காட்டுயானை ஒன்று வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவந்தது. மேலும் விவசாயநிலத்தில் காவலுக்கு இருந்த தமிழக விவசாயிகள் 2பேரையும் கொன்றது. 'கருப்பன்' என பெயரிடப்பட்ட இந்த காட்டுயானைக்கு நான்கு முறை மயக்க ஊசி செலுத்தியும் அது அசரவில்லை. இந்நிலையில் கும்கி யானைகளை கொண்டு இதனை விரட்டும் பணியானது 3 கட்டங்களாக நடைபெற்றது. எனினும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. மீண்டும் கருப்பனின் அட்டகாசம் தொடர்ந்தது. வனத்துறையினர் மீண்டும் பொள்ளாச்சி டாப் சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளை தாளவாடிக்கு கொண்டுவந்தனர். மறுபக்கம் கருப்பனின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ளார்கள்.
கும்கி யானைகள் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்ட 'கருப்பன்'
இந்த கண்காணிப்பின் மூலம் தாளவாடியை அடுத்த மகாராஜன்புரம் என்னும் பகுதியிலிருந்து இரவில் வெளியேறும் கருப்பன் அதிகாலைவரை கரும்புத்தோட்டத்தில் இருந்துவிட்டு, அதன்பின்னர் வனப்பகுதிக்கு திரும்புவது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று(ஏப்ரல்.,16)இரவு கரும்புத்தோட்டத்திற்கு வந்த கருப்பனுக்கு மருத்துவக்குழுவினர் மயக்க ஊசியினை செலுத்தினர். அதன்பின்னர் யானையின் செயல்பாடுகள் கட்டுக்குள் வந்தது. அதன் கழுத்து மற்றும் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டு, சின்னத்தம்பி, மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளின் உதவியுடன் 2 மணிநேரம் போராடி கருப்பனை லாரியில் ஏற்றினார்கள். கடந்த ஒரு ஆண்டாக தொந்தரவுக்கொடுத்து வந்த கருப்பன் யானை பிடிப்பட்டதையடுத்து அந்த சுற்றுவட்டாரமக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இந்நிலையில் பிடிபட்ட யானையினை வனப்பகுதியில் விடுவதா அல்லது யானைகள் முகாமிற்கு அனுப்புவதா?என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.