கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இங்குள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த சுற்றுலா தலங்களில் வாகனநிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடந்த சிலநாட்களாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறைக்காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து 15 குடும்பத்தினை சேர்ந்தோர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.
இவர்கள் வந்த வேன், பைன்மரக்காடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து வந்த மற்றொரு வேன், இந்த வேன் மீது மோதியது.
விபத்து
4 வேன்கள் அடுத்தடுத்து மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயம்
இந்த விபத்தில், தூத்துகுடியினை சேர்ந்த சுப்பையா(40) என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய வேன் மீது பின்னே வந்த 4 வேன்கள் அடுத்தடுத்து மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தோர், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சரகர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வனத்துறையினரிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.