தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த புதிய கடன் சேவையை வழங்குவதற்காக இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளுள் ஒன்றான, ஆக்ஸில் வங்கியுடன் கைகோர்த்திருக்கிறது, ஃபிளிப்கார்ட் நிறுவனம். ரூ.50,000-த்தில் தொடங்கி, ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன் சேவையை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஆவணங்கள் ஏதுமின்றி, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை மட்டும் கொடுத்து, ஆன்லைன் மூலமாகவே KYC செயல்முறையை மேற்கொண்டு, இந்த ஃபிளிப்கார்ட் கடன் சேவை மூலம் கடன் பெற முடியும். நாம் பெறும் கடன் தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்பப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஃபிளிப்கார்டின் திட்டம் என்ன?
தங்களது வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்களிடம் உள்ள குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வாங்கும் திறனை வைத்து கடனின் அளவை முடிவு செய்யவிருக்கிறது ஃபிளிப்கார்ட். புதிதாக கடன் வாங்குபவர்களை மையப்படுத்தியே இந்த புதிய சேவையை வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைந்து, 'Buy Now, Pay Later' வசதி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து, கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது ஃபிளிப்கார்ட். இந்தியாவில் உள்ள, தங்களுடைய 300 மில்லியன் வாடிக்கையாளர்களையும், அவர்களின் தகவல்கள் தளத்தையும் வைத்து இந்த புதிய கடன் சேவையை வெற்றிகரமான பாதைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.