சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இக்கோயில் குளத்தினை 'சித்திரை குளம்' என்றும் அழைப்பர். இந்த கோயிலின் அடையாளமாக விளங்கும் இக்குளத்தில் இன்று(நவ.,27)ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக இதுகுறித்து இந்து அறநிலையத்துறை, மீன்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகராட்சி பணியாளர்கள் 25 பேர் இன்று காலை 7 மணியில் இருந்து செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மீன்களின் இந்த திடீர் இறப்பிற்கு காரணம் என்ன?" என்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என கோரிய வெளிநாட்டு தம்பதி
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மலேசியா தம்பதி கூறுகையில், 'சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியினை அளிக்கிறது' என்றும், 'ஆனால் இறந்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சுத்தம் செய்து கோயில் நிர்வாகம் கோயிலை நல்லமுறையில் நிர்வகித்தால் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவார்கள்' என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள், 'கோயில் குளத்தில் விளக்கு போடுவதால் விளக்கில் இருக்கும் எண்ணெய் குளத்தில் கரைந்து அதன் காரணமாக மீன்கள் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது' என்றும் தெரிவித்துள்ளனர். 'எனவே குளத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கக்கூடாது. பதிலாக விளக்கு போட வேறு இடம் ஏற்பாடு செய்யவேண்டும்' என்றும் எடுத்துரைத்துள்ளனர். வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் இக்கோயிலினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.