லடாக் யூனியன் பிரதேசத்தில் அமலாக்கத்துறை முதல்முறையாக சோதனை
லடாக் 2019இல் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை முதல்முறையாக அங்கு சோதனை நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை 'எமோய்லண்ட் காயின்' என்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர். ஆனால், அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. இந்த பணத்தை மோசடியாளர்கள் ஜம்முவில் அசையா சொத்துக்களை வாங்குவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் ஏஆர் மீர் என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் போலி கிரிப்டோகரன்சி வணிகம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவலின்படி, லே, ஜம்மு மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில் இந்த வழக்கு தொடர்பான 6 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
கிரிப்டோகரன்சி மோசடி வழக்கின் பின்னணி
இந்த வழக்கு மார்ச் 2020 இல் லேவில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவு செய்யப்பட்ட சில புகார்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எமோலியண்ட் காயின் என்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்து பல அப்பாவி நபர்களை ஏமாற்றியதாக முதலில் புகார் அளிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் பதிவு அலுவலகம் லண்டனில் இருந்தாலும், அதன் இரண்டு புரமோட்டர்களான நரேஷ் குல்லியா மற்றும் சன்னி சிங் இந்தியாவில் இருந்தனர். அவர்கள் ஜம்முவில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கி, கிரிப்டோகரன்சி மோசடி மூலம் பெற்ற பணத்தை அதில் முதலீடு செய்தது தெரியவந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.