Page Loader
மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

எழுதியவர் Sindhuja SM
Jun 12, 2024
11:01 am

செய்தி முன்னோட்டம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். 9 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு அமர்வில், மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மேலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) பதவியேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜ்யசபாவின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 3, 2024 வரை நடைபெறும். மக்களவை தேர்தலை அடுத்து, குறைந்த பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும். ஜூன் 27 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.

இந்தியா 

மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் 

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய அரசாங்கத்தின் வரைபடத்தை அவர் கோடிட்டுக் காட்டுவார். குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து, மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பார்கள். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ரிஜிஜு, "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல், குடியரசுத் தலைவர் உரை மற்றும் விவாதத்திற்காக 24/6/24 முதல் 3/7/24 வரை 18வது லோக்சபாவின் முதல் அமர்வு நடத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.