முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோயில் யானைகள் திருவிழா போன்ற முக்கிய நாட்களில் உற்சவங்களில் சாமியின் வாகனமாக அமையப்பெறும். அதனுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கும். கேரளாவில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதனை கொண்டு பல திருவிழாக்கள் நடத்தப்படும். எனினும் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் பல இன்னல்களை சந்திப்பது மட்டுமல்லாமல், முறையான பராமரிப்பு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கோயில் யானைகள் பல வதைகளை அனுபவிப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் உள்பட பலர் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கேரளாவில் அறிவியல் பூர்வமாக தீர்வு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று பெயர் சூட்டிய நம்பூதிரி
அதன்படி கேரளா திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை இனி சேவைசெய்யவுள்ளது என்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ யானையினை பெட்டா(PETA ) அமைப்பானது கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளது. பார்க்க நிஜ யானை போலவே காட்சியளிக்கும் இது பொத்தானை அழுத்தினால் தனது துதிக்கை வாயிலாக நீரை உமிழ்கிறது என்று கூறப்படுகிறது. 10அடி உயரமும் 800கிலோ எடையும் கொண்டுள்ள இந்த யானை மேல் 4 பேர் அமரலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த யானையை கோயில் சாமி ஊர்வலத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று கோயிலின் தலைமை நம்பூதிரி ராஜ்குமார் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.