தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் பலி; திண்டுக்கல்லில் சோகம்
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பற்றவைக்கப்பட்ட சிகரெட்டில் இருந்து சிதறிய தீப்பொறியால் வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுல் ஹமீது தீபாவளிக்கு தயாராகும் வகையில் தனது வீட்டில் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தார். பட்டாசுக்கு அருகில் நின்று கொண்டு சிகரெட் புகைத்து கொண்டிருந்த போது அதிலிருந்து கங்கு பட்டாசில் பற்றி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. பட்டாசு அதிகளவில் இருந்ததால், வெடிவிபத்து பெரிய அளவில் ஏற்பட்டு சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது தீயணைப்புத் துறை
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உள்ளூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீதமுள்ள பட்டாசுகளை பாதுகாப்பாக அகற்றி, சாகுல் ஹமீதின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தீபாவளிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததால் வெடிவிபத்து ஏற்பட்டதா அல்லது சட்டவிரோதமாக நாட்டு வெடிபொருட்களால் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.