தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமன் மற்றும் பிறருக்கு எதிராக ஜனதிகர் சங்கர்ச பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், தற்போது ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆதர்ஷ் ஐயர் அளித்த புகாரில், பாஜகவின் தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டா மற்றும் கர்நாடக பாஜகவின் முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் போன்ற பல உயர்மட்ட பாஜக தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய வற்புறுத்தல்
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பெங்களூர் திலக் நகர் காவல் நிலையத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, எப்ஐஆர் உத்தரவுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, நிர்மலா சீதாராமனை ராஜினாமா செய்ய அழைப்பு விடுத்தார். உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவை மேற்கோள் காட்டி, இந்த விவகாரம் குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.