இன்ஸ்டா பிரபலம் நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை வழக்கு: பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைத் தூண்டல் புகார்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளம் நிதி ஆலோசகர் ஹரிஷின் தற்கொலை வழக்கில், பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேல் வெளியிட்ட விமர்சன வீடியோவே நேரடிக் காரணம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஹரிஷின் தந்தை விநாயகம், கானாத்தூர் காவல் நிலையத்தில் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைத் தூண்டல் புகாரை பதிவு செய்துள்ளார். ஹரிஷ் தற்கொலை செய்து கொள்வதற்குச் சில தினங்களுக்கு முன்பு, யூடியூபர் ஜேசன் சாமுவேல் தனது சேனலில் ஹரிஷை குறிவைத்து ஒரு கடுமையான வீடியோவை வெளியிட்டிருந்தார். அதன் காரணமாகவே ஹரிஷ் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனாலேயே தற்கொலை செய்து கொண்டார் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
போலி உரிமக் குற்றச்சாட்டும் பரவிய அவதூறும்
ஹரிஷ் முறையான செபி அங்கீகாரம் இல்லாதவர் என்றும், போலியான உரிமத்தை காட்டிப் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடுகிறார் என்றும் அந்த வீடியோவில் ஜேசன் சாமுவேல் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான எதிர்மறைக் கருத்துகளும், ட்ரோல்களும் குவியத் தொடங்கின.
நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு முதலீட்டு வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்த ஹரிஷ், இந்தத் திடீர் அத்துமீறிய இணையத் துன்புறுத்தல்களையும், மன உளைச்சலையும் தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை
கானாத்தூர் போலீஸாரின் தீவிர விசாரணை
ஹரிஷின் தந்தை, கானாத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,"என் மகன் மீது ஜேசன் சாமுவேல் திட்டமிட்டு பரப்பிய அவதூறு வீடியோவும், அதனால் சமூக வலைதளங்களில் கொடுக்கப்பட்ட கடுமையான சைபர் புல்லிங் சித்திரவதையும்தான் அவனை இந்தத் தற்கொலை முடிவுக்குத் தூண்டியது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தந்தையின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஜேசன் சாமுவேல் வெளியிட்ட யூடியூப் வீடியோவை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, தற்கொலைத் தூண்டல் பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வீடியோவில் தனிநபர் தாக்குதல் ஏதேனும் உள்ளதா, அந்த வீடியோவிற்குப் பின்னால் ஹரிஷுக்கு ஏதேனும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் சைபர் க்ரைம் போலீஸார் ஹரிஷின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்பைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.