பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்
பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, அடுத்த வாரம் இந்தியா வருவார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் குறிவைத்து படுகொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் வேளையில் ரேயின் வருகை பல கேள்விகளை எழுப்புகிறது. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய இரு அதிகாரிகளையும் கிறிஸ்டோபர் ரே புதுதில்லியில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளி பன்னுன்
கடந்த மாதம், ஃபைனான்சியல் டைம்ஸ், பன்னுனைக் குறிவைத்து இந்திய ஏஜெண்டுகளால் செய்யப்பட்ட ஒரு கொலைச் சதியை, FBI முறியடித்ததாகக் கூறியதை அடுத்து, சூழல் சற்று பரப்பானது. இதற்கு முன், மற்றொரு காலிஸ்தானி பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்திய அரசுடன் தொடர்புடைய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். எஃப்.பி.ஐ தலைவரின் வருகை இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. இந்திய அரசாங்கம் பன்னுனை பயங்கரவாதி என்று முத்திரை குத்தியுள்ளது. மேலும் அவர் தற்போது NIA ஆல் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியா-அமெரிக்க உயர்மட்ட சந்திப்பைத் தொடர்ந்து வருகிறார் FBI அதிகாரி
இந்த கொலை குறித்து சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, அமெரிக்க முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் மற்றும் இந்திய வெளியுறவு மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே டெல்லியில் சமீபத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, இந்திய அரசாங்கம் ஏற்கனவே இந்த குற்றசாட்டை விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், அதன் விசாரணை முடிந்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்டோபர் ரேயின் வருகைக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து, NIA உடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.