பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். "நேற்று இடிந்து விழுந்த அதே பாலம், கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் தான் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை அதிகாரிகள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பார்கள்,'' என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மாநில அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நீடித்து வருகிறது
இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிதிஷ் குமார், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்ததால் மாநில அரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நடந்து வருகிறது. பாலத்தில் பழுது இருப்பதால் அது வேண்டுமென்றே இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக நேற்று பீகார் அரசு கூறியது. ஆனால், இன்று அம்மாநில முதல்வர் அது தானாகவே இடிந்து விழுந்தது என்று கூறியுள்ளார். 2022இல் இடியுடன் கூடிய மழையின் போது இதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.