சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.
இவர் ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.
20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் பெண்கள் உள்பட அப்பகுதியின் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
வழக்கம் போல் இன்று(மே.,18) காலை தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.
அந்த ஆலையின் ஒரே அறையில் இருளாயி(48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள்.
அப்போது அதிக வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியுள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த தீயானது அங்கிருந்த பட்டாசுகளில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்க துவங்கியது.
வெடி
உடல் கருகிய நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
மருந்துகள் உராய்வு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 2 அறைகள் வெடித்து தரைமட்டமானது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயினை அணைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பட்டாசு விபத்தில் சிக்கிய 4 பேரும் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது.
எனினும் மருத்துவமனையில் சேர்த்த சிறிதுநேரத்திலேயே குமரேசன்(30)மற்றும் சுந்தர்ராஜ்(27)உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இருளாயி(48) மற்றும் அய்யம்மாள்(54)ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.