ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது. ஆனால் காலஅவகாச நீட்டிப்பு குறித்து எந்தவித அறிவிப்பினையும் தேர்தல்ஆணையம் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் 68.75%வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதாவது மொத்தம் உள்ள 6.20கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் அரியலூரில் 99%, கள்ளக்குறிச்சியில் 93.91%, நாகப்பட்டினத்தில் 87.49% பேரும், சென்னையில் 32%, கோவையில் 48.34%, செங்கல்பட்டில் 53.50%பேரும் விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் ஆதார்-வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியினை தேர்தல்ஆணையம் இதுவரை துவங்கவில்லை. இதற்கான அறிவிப்பும் வரவில்லை. விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்கவில்லை
இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 1, 2021முதல் மார்ச் 31, 2023வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த இணைப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. வாக்காளர்பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மத்திய சட்டத்துறை சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்தாண்டு மார்ச் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவியது. ஆனால் தேர்தல ஆணையம் அவ்வாறு எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.