
நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்
செய்தி முன்னோட்டம்
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் 2022-23ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் உள்ள 7.5% உள் ஒதுக்கீட்டினை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா. சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அவர், ஈரோட்டில் தேர்தல் நடைபெறவுள்ளதால் 10 மாணவர்களுக்கு அதன் பின்னர் கையடக்க கணினி வழங்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து, அரசு பள்ளியில் பயின்று மருத்துவப்படிப்பினை மேற்கொள்வது சாதாரண விஷயம் இல்லை என்று பேசினார்.
தானும் அரசு பள்ளியில் படித்துதான் இந்நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற பல மருத்துவர்கள் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மா.சுப்ரமணியம்
நீட் தேர்வு விலக்கிற்காக போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் விலக்கு பெற போராடிவரும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விஷயங்களை கேட்டுள்ளது.
அதற்கான விளக்கம் இன்னும் இரண்டே தினங்களில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த டிசம்பர் 31ம்தேதியோடு இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியானது.
முதல்வர் கூறியவாறு ஜனவரி 4ம்தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் 2மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
இதற்கான ஒப்புதலும் ஆளுநரிடம் பெறப்பட்டது என்று கூறினார். இனி அந்த குழுவிற்கு ஆளுநர் தான் வழிகாட்டவேண்டும் என்றும்,
தேடுதல் குழு தேர்வுசெய்யும் மூவருள் ஒருவரை ஆளுநர் தான் தேர்ந்தெடுப்பார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.