ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது. இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது அவசரமான விவகாரம் இல்லை என்று தெரிவித்தது. மேலும், கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரிப்பார் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய மனுதாரரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய், இந்த முக்கியமான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கொள்ளாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
கோடை விடுமுறையின் போது இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: நீதிமன்றம்
"இது நீதிமன்றம், பொது மேடை அல்ல, இந்த விவகாரம் எங்காவது முடிவுக்கு வர வேண்டும்" என்று இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். 2,000 ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து உபாத்யாய் தாக்கல் செய்த அவசர மனு கடந்த ஜூன் 1ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது. மேலும், கோடை விடுமுறையின் போது இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை குற்றவாளிகளும் பயங்கரவாதிகளும் எந்தவித அடையாளச் சான்றும் இல்லாமல் மாற்றுவதாக இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.