வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில் சென்னை மண்டல அகழாய்வு சார்பில் மத்திய தொல்லியல் துறை 2ம் கட்ட அகழாய்வினை தற்போது நடத்தி வருகிறது. இதில் 4 அகழ்வாய்வு குழிகள் தோண்டுவதற்கான பணிகள் சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளரான காளிமுத்து தலைமையில் நடைபெற்று வந்தது. அதன்படி, 18-43 செ.மீ., வரை வெவ்வேறு அளவிலான ஆழத்தில் கடந்த 1 மாதமாக தோண்டப்பட்டுள்ள இந்த குழிகளில் 400க்கும் மேலான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் சுடுமண்ணாலான வட்டசில்லுகள், பானை வடிவத்தினை செப்பனிடும் கருவிகள், முத்திரைகள், கருப்பு-சிவப்பு மற்றும் வண்ண கோடுகள் கொண்ட பானை ஓடுகள் ஆகியன கிடைத்துள்ளது.
சோழர்களின் கலை நயமானது செம்பு பொருட்கள் மூலம் தெரிகிறது
மேலும், விலைமதிக்கத்தக்க சோப் ஸ்டோன் வகையிலான கல் மணிகள், அகேட், விலை உயர்ந்த கார்னேலியன், அமேதிஸ்ட காதணிகள், பதக்கங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செம்பால் செய்யப்பட்ட மூடியுடன் கூடிய குங்கும சிமிழ் கிண்ணம், மூடியில்லா கிண்ணங்கள், ஆணி வடிவில் உள்ள தண்டு பகுதிகள், தங்க ஆபரணத்தின் சிறு தகடுகள் கிடைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அகழாய்வு குழிகளின் மேம்பகுதியில் ராஜ ராஜ சோழனின் நாணயம், சோழர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளது. சோழர்களின் கலை நயமானது செம்பு பொருட்கள் வடிவமைக்கப்பட்ட விதத்தில் தெரிகிறது என்னும் கருத்து தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.