பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று காலை 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மத்திய தமிழக மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த சமயத்தில், டிஜிபி ராஜேஷ் தாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார். மேலும், அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்தற்காக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஜூலை 17ஆம் தேதி வரை ராஜேஷ் தாஸின் தண்டனைக்கு இடைக்கால தடை
இதனையடுத்து, தமிழக காவல்துறை சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து டிஜிபி ராஜேஷ் தாஸ் நீக்கப்பட்டார். அதன் பிறகு, இந்த வழக்கில் மொத்தம் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று காலை தீர்ப்பளித்த விழுப்புரம் அமர்வு நீதிபதி புஷ்பராணி, டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜூலை 17ஆம் தேதி வரை ராஜேஷ் தாஸின் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.