சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்
சென்னை நகரம் உருவாகி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22 அன்று 'மெட்ராஸ் டே' அனுசரிக்கப்படுகிறது. விஜயநகர அரசின் கீழ் இருந்த இந்த நகரம், கிழக்கிந்திய கம்பெனியின் முன்னெடுப்பால், துறைமுக நகரமாகவும், சென்னை பட்டினமாகவும் உருவானது. ஜார்ஜ் கோட்டையிலிருந்து தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், இந்த நகரில் உள்ள முக்கிய இடங்களின் பெயர்களை, அவர்களுக்கு புரியும்படியும், எளிதாக உச்சரிக்கவும் மாற்றி அமைத்தனர்.
சென்னை உருவான விதம்
விஜய நகர மன்னர்களும், அதன் பின்னர் ஆற்காட் நவாப்களும் ஆண்ட இந்த நகரத்தை, தங்களின் துறைமுக போக்குவரத்துக்காக தேர்வு செய்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். அப்போதைய விஜயநகர சாம்ராஜ்யத்தின் படைத்தளபதியும், குறு மன்னனுமாகிய தாமர்லா முடிராச சென்னப்ப நாயக்குடு என்பவரிடம் இருந்து, 1639 ஆம் ஆண்டு, இந்த நிலத்தை பெற்றது கிழக்கிந்திய கம்பெனி. அதன் நினைவாக 'சென்னை பட்டினம்' என குறிக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட விற்பனை ஒப்பந்தத்தில் தான் முதல்முதலாக 'சென்னை' என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சென்னையின் முக்கிய இடங்களின் பெயர்கள்
சிந்தாதரி பேட்டை: சின்ன தறி பேட்டை தான் தற்போது மருவி சிந்தாதரிபேட்டை என மாறியுள்ளது. இந்த இடத்தில் தறி நெசவாளர்கள் அதிகம் பேர் குடி கொண்டிருந்ததாகவும், குடிசை தொழில் போல, இங்கே தறிகள் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை: பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கே குடிபெயர்ந்ததும், அவர்கள் கண்டுபிடித்த இடம் தான் இந்த வண்ணாரப்பேட்டை. அவர்களின் துணிகளை துவைக்கவும், உலர்த்தவும், இங்கே கூவம் ஓடும் கூவம் ஆற்றங்கரையில், சலவைக்காரர்களை குடியமர்த்தினர். அதன் காரணமாகவே இந்த பெயர்.
மந்தைவெளி, ராயபுரம்
மந்தைவெளி: அடையாறு ஆற்றங்கரையில் பலர் தங்களது கால்நடைகளை மேய்ப்பது வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக, பசுமையான புற்கள் நிறைந்த இந்த இடத்தில், மந்தையாக ஆடுகளும், மாடுகளும் மேய்ச்சலுக்கு வருவதால், இந்த இடத்தை 'மந்தைவெளி' என குறிப்பிடத்துவங்கினர். ராயபுரம்: அப்போதிருந்த 'ராயர்' அதாவது அரசர் நினைவாக இந்த 'ராயர்'புறம் மருவி 'ராயபுரம்' என மாறியது. மின்ட் ஸ்ட்ரீட்: 'மின்ட்' என்றால் ஆங்கிலத்தில் உலோகங்களை உருக்குவது என பொருள். 1841-1842 காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம், இங்கே காசுகள் அச்சடிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினர்.
நந்தனம், பாரிஸ் கார்னர், கொத்தவால்சாவடி
கொத்தவால்சாவடி: பிரிட்டிஷ் அரசாங்கம், வரி வசூலிப்பவர்களை குறிப்பிடும் பெயர் கொத்தவால். சென்னையில் இந்த இடத்தில் தான், வரி வசூலிக்கும் அதிகாரிகளின் அலுவலகங்களும் இருப்பிடமும் இருந்தது நந்தனம்: சுதந்திரத்திற்கு பிறகு, வீடு வசதித்துறை இங்கே வீடுகளை கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு தந்தது. அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால், மூதறிஞர் ராஜாஜி, இந்த பெயரை சூட்டினார். பாரிஸ் கார்னர் : தாமஸ் பாரிஸ் என்பவர் இந்த இடத்தில் வியாபாரத்தை துவங்கியதால், அவர் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது.