எத்தனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 40 ஆயிரம் லிட்டர் சாலையில் கொட்டியதால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டேங்கரில் இருந்த சுமார் 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் திரவம் சாலை முழுவதும் ஆறாக வழிந்தோடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனத் திரவம் என்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவிய நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
பரபரப்பு
வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி
சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் திரவத்தை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று (நவ. 14) காலை புறப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் டாங்கன் (49) என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையில் செட்டிபாளையம் ஜெ.ஜெ. நகர் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது, லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியின் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் திரவம் சாலை முழுவதும் ஆறாக வழிந்தோடி அருகிலுள்ள காலி இடத்தில் தேங்கியது.
போக்குவரத்துப் பாதிப்பு
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை
எத்தனால் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனத் திரவம் என்பதால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் பீதியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செட்டிபாளையம் போலீஸார் மற்றும் கோவை தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கினர்.
தரையில் கொட்டிக் கிடந்த எத்தனாலில் தீப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த நுரை நீரைப் பீய்ச்சியடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுப் போக்குவரத்து மாற்றிவிடப்பட்ட நிலையில், செட்டிபாளையம் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.