Loading...
அமெரிக்க ஐவி லீக் பல்கலையில் சாதித்த தமிழ் மாணவன்! ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப்புடன் பிரணவ் இளங்கோ சாதனை
ஈரோடு மாணவருக்கு ரூ.3.55 கோடி கல்வி உதவித்தொகை

அமெரிக்க ஐவி லீக் பல்கலையில் சாதித்த தமிழ் மாணவன்! ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப்புடன் பிரணவ் இளங்கோ சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
04:55 pm

செய்தி முன்னோட்டம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிரணவ் இளங்கோ என்ற மாணவர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்வாகியுள்ளார். அங்கு தனது 4 ஆண்டுகால இளங்கலை பட்டப்படிப்பைப் பயில அவருக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை அவரது படிப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் முழுமையாக உள்ளடக்கியதாகும்.

பயணம்

டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் வழிகாட்டுதலும் ஆரம்பகாலப் பயணமும்

ஈரோடு சி.எஸ் அகாடமி பள்ளியில் பயின்ற பிரணவ், தனது 13வது வயதிலேயே சர்வதேசக் கல்விக்கானத் தயார்நிலையைத் தொடங்கினார்.

டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் தேசிய கல்வியாளர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்த அவருக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்ட சிறந்த வழிகாட்டுதல்களும் பயிற்சிகளுமே இந்த சாதனையை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தன.

மேலும், கேம்பிரிட்ஜ் ஐஜிசிஎஸ்இ கணிதப் பாடத்தில் உலகளவில் முதலிடம் பெற்று பிரணவ் ஏற்கனவே அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடப்பிரிவு

பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதத் துறைகள் தேர்வு

பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதம் ஆகிய இரு முக்கியத் துறைகளை ஒன்றாக இணைத்து பிரணவ் பயிலவுள்ளார்.

கணிதம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எளிய மக்களுக்கு உதவும் வகையிலான புதிய பொது சுகாதாரத் தொழில்முனைவு மாதிரிகளை உருவாக்குவதே தனது நீண்டகால லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியாவிற்கு சேவை

இந்தியாவிற்குச் சேவை செய்ய விரும்புவதாக மாணவர் நெகிழ்ச்சி

1764 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிகக் கடினமான மாணவர் சேர்க்கை விகிதத்தைக் (5%) கொண்ட முன்னணி உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாகும்.

இந்த வாய்ப்புக் குறித்து நெகிழ்ந்துள்ள பிரணவ், "பிரவுன் பல்கலைக்கழகத்தின் உயரிய கல்வியைப் பெற்றுத் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் தாய்நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கும், எளிய மக்களின் தேவைகளைத் தீர்ப்பதற்கும் முழுமையாகப் பயன்படுத்துவேன்" என உறுதியளித்துள்ளார்.

இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT