ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.31.,) துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் தளத்தில், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கவுள்ளது.
இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் மற்றும் காவல் பார்வையாளர் நியமனம்
இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக பல்வேறு கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிகம் குவிகிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியில் முகாமிட்டு உள்ளார்கள். இதனையடுத்து தற்போது இந்த இடைதேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.