ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈ.பி.எஸ். தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 11.7.2022ல்நடைபெற்ற பொதுக்குழுவின் அடைப்படையில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது. இதற்கு ஓ.பி.எஸ். தரப்பில் அதிமுக'வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று பதில் மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரட்டை இலை சின்னம் விவகாரம்-பதில் மனு அளித்த தேர்தல் ஆணையம்
இதே போல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில், 11.7.2022ல் நடந்த பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதனையும் தேர்தல்ஆணையம் ஏற்கவில்லை என்று பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அதுகுறித்த முடிவினை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(பிப்.,3) நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரியான சிவகுமாரிடம் இதுகுறித்து கேட்கையில், இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது. அதுவந்த பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.