ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தீவிர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக'வினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, குக்கர், தலா ரூ.1000போன்ற பரிசுப்பொருட்களை வழங்கிவருவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் பறக்கும்படையினர் குறிப்பிட்ட பகுதியான சிந்தா நகர், மாதவகாடு போன்ற இடங்களில் நேற்று(பிப்.,20)மாலை சோதனை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் குக்கர், கொலுசு, பணம் என எவ்வித பொருளும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், புகார்கள் எழுந்த மற்ற பகுதிகளில் சோதனையினை பறக்கும்படையினர் மேற்கொண்டனர். இதில் ஓர் குடோனில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அங்கு சென்றும் தேடினர். ஆனால் அங்கு என்ன பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
வேனில் வந்திறங்கிய நபர் அப்பகுதி வாக்காளர்களுக்கு குக்கர்கள் விநியோகம்
இந்நிலையில் முன்னதாக நேற்று காலை தேர்தலுக்குட்பட்ட இடம் ஒன்றில் வேனில் ஒருவர் வேட்டி சட்டை அணிந்து கொண்டு வந்து இறங்கி, அப்பகுதியில் உள்ள 5குடும்பங்களுக்கு பரிசாக குக்கர்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் டோக்கன்களை மற்றவர்களுக்கு விநியோகம்செய்து அருகிலுள்ள குடோனிற்கு சென்று குக்கர்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதுபற்றி தெரிந்தவுடன் மற்றகட்சியினர் அங்குத்திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் அப்பகுதி மக்கள் கையில் புதிய குக்கர்கள் வைத்திருக்கும் வீடியோயொன்றும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி பெரும்பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வேட்டி, பட்டு புடவை மற்றும் 500ரூ.பணம் ஆகியனவற்றை அளித்துசென்றார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.