ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்பது மக்கள் நினைக்குமாறு பிளாஸ்டிக் அரிசி அல்ல, இதில் போலிக்அமிலம், இரும்புச்சத்து விட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அரிசியானது முதல்கட்டமாக அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடுமுழுவதும் 112 மாவட்டங்களை தேர்வுசெய்து இந்த அரிசியினை தற்போது உணவு திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இந்த அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து ரேஷன்கடைகளில் இந்த அரிசியினை விநியோகிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. 2024க்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த அரிசியினை வழங்கவேண்டும் என்பது மத்தியஅரசின் இலக்கு.
ரசாயனம் கலந்த அரிசி என அச்சத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
அதன்படி, சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்ச அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக தமிழக நுகர்பொருள் வாணிய கழகத்தின் சென்னை மேலாளர் எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார். இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்த அரிசி கடந்தமாதம் முதல் எவ்வித முன்னறிவிப்பின்றி ரேஷன்கடைகளில் வழங்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த அரிசி இயற்கைக்கு மாறாக எறும்பு கூட தின்ன முடியாத அளவிற்கு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்துநேரிடும் என்று மக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அரிசி ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.