பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து ஏ.ஐ.சி.டி.இ. அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாணவர் சேர்க்கை அனுமதியினையும் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரமும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், மாணவர் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 11ம் தேதி ஆகும். மேலும் மாணவர் சேர்க்கையின் இறுதிக்கட்ட காலியிடங்களை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். அதன்படி இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்புகள் செப்டம்பர் 15ம் தேதியே துவங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையினை முடிக்க இந்த கால அட்டவணையினையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.