
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி இன்று(ஜூன்.,26) தேரோட்டம் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே, ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று அக்கோயில் தீட்சிதர்கள் பதாகை ஒன்றினை வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.
அந்த புகாரின்படி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா, வாட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் நேற்று(ஜூன்.,25)நேரடியாக சென்று குறிப்பிட்ட அந்த சர்ச்சையினை கிளப்பும் பதாகையினை அகற்ற முயற்சி செய்தனர்.
அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ததோடு, பதாகையினை எடுக்க எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.
அனுமதி மறுப்பு
பதாகையினை எடுக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை
இதன் காரணமாக காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர் என்று தெரிகிறது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து அக்கோயிலின் தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர், கோயிலின் இணை ஆணையாளர் உத்தரவுப்படியே இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து, "கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தேரில் வைத்து வெளியே கொண்டு வருகையில், பாதுகாப்பு கருதி கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது"என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பக்தர்கள் தொடர்ந்து பதாகையினை எடுக்க கோரிக்கை வைத்துவந்த நிலையில், கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த பதாகையினை அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்போடு சென்று அகற்றியுள்ளனர்.