என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தினையடுத்த ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியிலுள்ள கிராமத்தில் இருந்து வந்தவர் ரவுடி விஷ்வா. குள்ள விஷ்வா என்றழைக்கப்படும் விஸ்வநாதன் மீது கொலை வழக்கு, கொள்ளை வழக்கு என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்படி, சில குற்ற வழக்குகளுக்காக அவர் ஸ்ரீபெரம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இடையில் அவர் கையெழுத்திட வராமல் தலைமறைவானதால் அவரை பிடிவாரண்ட் கொண்டு பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(செப்.,16) அவரை காவல்துறையினர் கைது செய்து சோகண்டி பகுதியருகே அழைத்து வருகையில், விஷ்வா காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்காப்பிற்காக அவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இறப்பதற்கு முன்னரே கடிதம் எழுதி வைத்த ரவுடி
இதில் ரவுடி விஷ்வா மரணடைந்த நிலையில், அவரது உடலை காவல்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரவுடி விஷ்வா தான் என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு முன்னரே ஓர் கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில் அவர், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் தான் கையெழுத்திட சென்றபொழுது அவரிடம் கையெழுத்தினை வாங்காமல், சுட்டு விடலாமா? என்று எஸ்ஐ தயாளன், ஆய்வாளர் பரந்தாமனிடம் கேட்டார் என்று எழுதியுள்ளார். மேலும், "இதனால் அச்சமடைந்ததால் தலைமறைவானேன். ஒருவேளை எனக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இக்கடிதம் வெளியாகியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.