தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இருந்து உயர்மட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாவை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எட்டு மசோதாக்களில் இந்த மசோதா குறிப்பிடப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பதவியை நிர்வகிக்கும் இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர்(CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை(ECs) நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை(CJI) விலக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறான தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான தேர்தல் ஆணையர் பதவியை கேபினட் செயலருக்கு இணையான பதவியாக மாற்றவும் இந்த மசோதா முயல்கிறது. CEC மற்றும் ECக்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது நினைவுகூரத்தக்கது. எனினும், இது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும் வரை மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறி இருந்தது.
தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா-2023 நிறைவேற்றப்பட்டால் தேர்வுக் குழு ஒருதலைப்பட்சமாக மாறக்கூடும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் SY குரைஷி கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கவலையை எழுப்பி இருந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் மார்ச் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். "நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது," என்று அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.