6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஆறு உள்துறைச் செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தின் காவல்துறை தலைமை இயக்குநரை இடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெரிய தேர்தலுக்கு முன்பு அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவது மிக சாதரமான விஷயமாகும். ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களும், மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் அலுவலகங்களின் மூத்த அதிகாரிகளும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையராக இருக்கும் இக்பால் சிங் சாஹல் மற்றும் மும்பையை ஆளும் குடிமை அமைப்பில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது பொது தேர்தல்
2024 பொது தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த் திடீர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் அவரது இரு கூட்டாளிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரவிருக்கும் பொது தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும், 26 இடங்களுக்கான இடைத்தேர்தலிலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமநிலையை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.