தேர்தல் 2026: காங்கிரஸ் -திமுக இடையே 'அதிகாரப் பகிர்வு' மோதலா? தவெக-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விருப்பம்?
செய்தி முன்னோட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி பங்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன என இந்தியா டுடே செய்தி கூறுகிறது.
தொகுதி பங்கீடு
சீட் பங்கீடு: காங்கிரஸின் 40 Vs திமுகவின் 32
வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தனது உள்கட்சி இலக்காக நிர்ணயித்துள்ளது. கடந்த தேர்தல்களை விட கூடுதல் இடங்களில் போட்டியிடுவதன் மூலமே தங்களின் அரசியல் முக்கியத்துவத்தை தக்கவைக்க முடியும் என அக்கட்சி கருதுகிறது. ஆனால், ஆளும் திமுக தரப்பில் காங்கிரசுக்கு 32 இடங்கள் மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காங்கிரஸ் தனது பிடிவாதத்தைக் குறைத்து, 38 இடங்களுக்குக் இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் திமுக விடாபிடியாக இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
அதிகார பகிர்வு
கட்சிக்குள் ஒலிக்கும் 'அதிகார பகிர்வு' முழக்கம்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "கூட்டணி என்பது வெறும் தொகுதிகளுடன் முடிந்துவிடக் கூடாது; வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு (Cabinet share) வேண்டும்" என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளார். இதற்கு திமுகவின் ஆர்.எஸ். பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 'கூட்டணி ஆட்சி' என்பது அந்நியமான ஒன்று என அவர் விமர்சித்துள்ளார். மற்ற வடமாநிலங்களில் தற்போது இது போன்ற 'அதிகார பகிர்வு' வழக்கமாகி வரும் நேரத்தில், தமிழகத்திலும் அது போல வேண்டும் என்பது காங்கிரஸின் வாதம்.
கூட்டணி
மாறுகிறதா கூட்டணி; TVK உடன் நட்புக்கரம் நீட்டும் காங்கிரஸ்
திமுக உடனான இந்த இழுபறிக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உடனான கூட்டணி குறித்தும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தலைவர் ஒருவர் விஜயை நேரில் சந்தித்த விவகாரம் நினைவிருக்கலாம். இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், ராகுல் காந்தியிடம் விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து பேசி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக தரப்பில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால், TVK-வுடன் கைகோர்க்கும் திட்டத்தில் காங்கிரஸின் ஒரு தரப்பு உறுதியாக உள்ளது. டிவிகே செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், விஜய் மற்றும் ராகுல் காந்தி நண்பர்கள் என்றும், காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்.