தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள்
நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் முன்னாள் எம்பிக்கள் 9 பேரின் பெயர்கள் மிஸ்ஸிங். இதில் குறிப்பாக தஞ்சை எம்பி பழனிமாணிக்கமும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. கவுதம சிகாமணி மீதுள்ள வழக்குகள் மற்றும் தொகுதியில் அவரது செயல்பாடுகள் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
களமிறங்கும் 11 புதுமுகங்கள்
பழைய முகங்கள் தவிர்க்கப்பட்டு நிலையில், 11 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது திமுக. அதில் குறிப்பாக அமைச்சர் நேருவின் மகனான அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர வேட்பாளர் பட்டியலில் 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதோடு 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே தெரிவித்திருந்தது போல, தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை- தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு; வேலூர்- கதிர் ஆனந்த்; நீலகிரி (தனி)- ஆ.ராசா; தேனி- தங்க தமிழ்செவன் மற்றும் தூத்துக்குடி- கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.