நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்புக் மீறல் தொடர்பாக 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது. பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச 13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.
பிடிபட்ட 5 குற்றவாளிகள்
அந்த சம்பவத்தின் போது, நுழைவு வாயில், நாடாளுமன்ற வளாக நுழைவுப் பகுதி உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 1.02 மணியளவில் நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்தின் போது, கைகளில் மஞ்சள் புகையை குண்டுகளை ஏந்திய இருவர், திடீரென்று பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவை அறைக்குள் குதித்து முழக்கங்களை எழுப்பினர். அதே நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேவும் இருவர் புகை குண்டுகளை வீசி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். போராட்டம் நடத்திய 4 பேர் உட்பட இந்த பாதுகாப்பு அத்துமீறலுக்கு திட்டம் தீட்டிய 5 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவர் டெல்லி காவல்துறை தேடி வருகிறது.