இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 86 ஆயிரம் தொடக்க பள்ளி மாணவர்களின் கல்வி திறன் பற்றி நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்(என்சிஇஆர்டி) ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், தமிழகத்தில் படிக்கும் 3ஆம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவர்கள் தமிழ் மற்றும் கணித பாடங்களில் பின்தங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின் தங்கி இருக்கிறது.
இந்த ஆய்வின் தகவல்கள்:
20% மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. 23% மாணவர்களுக்கு மட்டுமே அடிப்படைக் கணக்குத் தெரிகிறது. 52% மாணவர்களால் காலண்டரில் தேதி, மாதத்தைக் கூட சரியாக சொல்ல முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் படிக்கும் 40-45% மாணவர்கள் தாய்மொழியையும் கணக்கையும் நன்கு படிக்கின்றனர். கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்கள் பள்ளிகள் சரியாக செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்ய எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இல்லம் தேடி கல்வி திட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. இருப்பினும், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன் பின்தங்கியே இருப்பதால் இது போன்ற திட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது.