செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கைதுச்செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தார்.
இதுகுறித்த விசாரணையில் 3ம் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியினை கைது செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பினை எதிர்த்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து இன்று(ஆகஸ்ட்.,7)உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது.
விசாரணை
செந்தில் பாலாஜி உடல்நிலையினை அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும்-நீதிபதி அல்லி
இதுகுறித்த விசாரணை நீதிபதி.,அல்லி முன்னர் வந்தநிலையில், புழல் சிறையிலிருந்து காணொளிக்காட்சி மூலம் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின்பொழுது, அமலாக்கத்துறை உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பித்துள்ளது.
அப்பொழுது அமலாக்கத்துறை விசாரணை நாட்களில் செந்தில்பாலாஜியின் உடல்நிலையினை தினமும் 2முறை காவேரி மருத்துவமனை பரிசோதிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு அமலாக்கத்துறை சார்பிலான வழக்கறிஞர், இதே கோரிக்கை உச்சநீதிமன்றத்திலும் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும் என்று தெரிவித்தது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி.,அல்லி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில் இதுதொடர்பாக வேறுஎந்த உத்தரவும் பிறப்பிக்கமுடியாது. செந்தில் பாலாஜி உடல்நிலையினை அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும் என்றுக்கூறி, ஆகஸ்ட் 12ம்தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.